search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"

    • குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை.
    • மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

    மண்டபம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய-இலங்கை கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என மீனவர்களை எச்சரித்தனர். உடனடியாக 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம், அவசரமாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் இலங்கை கடற்படை வீரர்கள் அத்துமீறி ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் தாவிக்குதித்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக்கொண்டனர். அத்துடன் மீன்பிடி உபகரணங்கைளையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

    இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டு விட்டு கரைக்கு புறப்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ராஜா, கீதன், சகாயராஜ், ஆகியோருக்கு சொந்தமான மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும், அதிலிருந்து டைட்டஸ், சரவணன், ஜெரோம், யாக்கோபு உள்ளிட்ட 23 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அதனை தங்களது ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இந்நிலையில் இலங்கையில் பாராளுமன்ற பொது தேர்தல் வரும் நாம் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஒரே இரவில் 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

    கடந்த 29-ந்தேதி கொழும்புவில் நடைபெற்ற இரு நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மீனவர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய சார்பில் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது வேதனை அளிப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), தேவராஜ் (32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (46), தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (36) ஆகிய 4 மீனவர்களும் கடந்த 9-ந்தேதி காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    தொடர்ந்து, அவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களது கப்பலை கொண்டு தமிழக மீனவர்களின் பைபர் படகில் மோதியதுடன், மீனவர்களை தாக்கி விட்டு சென்றுவிட்டனர்.

    இதனால் பைபர் படகு நிலைகுலைந்து கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் மற்ற மீனவர்களின் படகின் மூலம் கரைக்கு வந்தனர். அவர்களது படகும் மீட்கப்பட்டது. இதில் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இலங்கை கடற்படை தாக்குதல் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செருதூர் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது.
    • இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    தொடர்ந்து, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    அதனை தொடர்ந்து, காயமடைந்த மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு வந்தனர். பின்னர், சக மீனவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் எங்களுக்கு சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது சக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மண்டபம்:

    இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சு றுத்தல்களால் தமிழக மீன வர்கள் கடுமையான அவ திக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த வாரம் நாகை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத சிலர் மீது இந்திய கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள்.

    கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதற்கான பேச்சு வார்த்தை பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்து இருந்தது.

    காற்றின் வேகம் சற்றே குறைந்த நிலையில் 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதில் நேற்றும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையாக கருதப்படும் பாரம்பரிய கடற்பகுதியான தனுஷ் கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே வலைகளை விரித்து இடையே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது நள்ளிரவு அங்கு இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான கடற்படை ரோந்து கப்பல் வந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.

    அதில் இருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த கிங்சன் (வயது 40), மெக்கான்ஸ் (37), ராஜ் (43), இன்னாசிராஜா (45), சூசை (40), மாரியப்பன் (45), அடிமை (33) மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் (23) ஆகிய 8 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரகள் உறுதியான நடவடிக்கை எடுக்க மீனவ சங்கங்கள் வலியுறுத்தி உள்ளது.

    • மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இருக்கிறது.

    இந்தநிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேசுவரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

    அதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை 5-வது நாட்களாக தொடர்வதால் ரூ.8 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமலும், 5 நாட்கள் ஆன நிலையில் வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

    தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடலுக்குச் சென்று அதிக மீன்களை பிடித்து வரலாம் என்று நினைத்த மீனவர்களுக்கு, கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    சுறைகாற்றின் வேகத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் 2-வது நாளாக முடங்கிப் போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய பைபர் படகுகளும் கடற்கரையில் ஓய்வெடுக்கின்றன. காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை.
    • இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது.

    பிரதமர் மோடி இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண கோரி மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது.
    • கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், இருவர் மீட்பு என்ற நிகழ்வுகள் மிகவும் கண்டனத்துக்குரிய சம்பவங்களாகும். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் கொடுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு எங்களது உரிமை என்று குரல் எழுப்பி, கச்சத்தீவை தாரை வார்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அம்மா, பல்வேறு உச்ச நீதி மன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி அ.தி.மு.க.வை வாதியாக சேர்த்தார். தொடர்ந்து வருவாய்த் துறையையும் இதிலே ஒரு வாதியாக சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் இதை செயல் படுத்தினார்.

    கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வாதாரமும், மீனவருடைய எதிர் காலமும் பாதுகாக்கப்படும். அதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை அம்மாவும், அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் நடத்தி வந்தார்கள்.

    கடந்த 2019 ஆண்டில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இலங்கை கடற்படை படகு மோதி இன்றைக்கு மீனவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று சொன்னால் நம்முடைய உரிமையை மீட்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அன்றாடம் கடலுக்கு சென்றுதம் உயிரை பணயம் வைத்து அவர்கள் பிடித்து வருகிற மீனை இங்கே பல்வேறு தடைகளைத் தாண்டி அதை விற்பனை செய்து அதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிற அந்த மீனவர்களுக்கு இந்த அரசு கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

    மீனவர் உயிர் என்பது நாம் எளிமையாக கடந்து போய்விடக் கூடாது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே இப்படி உயிரைப் பறிக்கிற சம்பவங்கள் கடலுக்குள்ளே நடைபெறுவதை இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது.

    ஒட்டுமொத்த மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. எப்பொழுது எல்லாம் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கிறதோ அப்பொழுதெல் லாம் இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு வீழ்த்தப்படுகிற இந்த துயர சம்பவம் தொடர்ந்து கொண்டே இருப்பதை வரலாறு நமக்கு நினைவூட்டினாலும், இனி வருகிற காலங்கள் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு இதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
    • மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்களது படகு மீன்பிடிக் கப்பல் ஒன்றின் மீது (IND-TN-10-MM-73) மோதியது.

    இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 4 மீனவர்களில் 1 மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார், 1 மீனவர் தற்போது காணாமல் போயுள்ளார், மேலும் இரு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. நேற்று நடந்த சோகமான சம்பவம், நமது மீனவர்களில் ஒருவரின் மரணம் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டது, உங்கள் தலையீட்டின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையீடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    முன்னதாக, இச்சம்பவம் குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


    • ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
    • இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில்,

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றாலும் அவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஒன்றாம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை சிங்களக் கடற்படை கைது செய்த இலங்கைக் கடற்படை, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மேலும் 13 மீனவர்களை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கைது நிகழ்வு நடந்திருக்கிறது.

    மீன்பிடித்தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைபடகுகளை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது.

    தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் முடிவில்லாமல் தொடரக்கூடாது. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×